Wednesday, 1 February 2012

வலிகளின் பிம்பங்கள்.

வலிகளின் பிம்பங்கள்.

பனிக்குட பிளவு
தொப்புள்கொடி அறுப்புடன் ஆரம்பம்...

காதில் குத்தப்பட்டு அழுது
சில காலம் கழித்து மறந்து..
மறைந்துபோனதாய் நினைத்து
தொட்டபோது அங்கிருந்த ஒரு புள்ளி...

பிரம்பால் வாங்கிய அடிக்கு
புட்டத்திலும் உள்ளங்கையிலும்
இருந்த சிவப்பு வரிகள்..

திருடித்தின்ற மிட்டாய்க்கு
தண்டனையாய்
அன்று அம்மா வைத்த சூடு...

அவன் உடல் நலன் கருதி
அன்று அவள் எடுத்த
அக்னிச்சட்டியின் கொப்புளங்கள்..

விட்டுச்சென்ற காதல்
விரலில் இருக்கும் சிகரெட்
கைகளில் ஆங்காங்கு இருந்த சில
தளும்புகள்...

கணவன் இறந்தபின்
உடைக்கப்பட்ட வளையல்கள்
கீறியதால் வழிந்த மணிக்கட்டு ரத்தம்..
அழித்துவிட்ட குங்குமம்
அதன்பின் அறுக்கப்பட்ட தாலி...

கோபத்தில் வெளியான வார்த்தைகள்
அதனால் வழிந்த கண்ணீரின்
சுவடுகள்...

முதுமையில் வரும் மறதி
அதனால் பெற்ற அவமதிப்பு
அதற்குப்பின் விடியாத இரவு...

எரிக்கப்பட்டபின் கிடைத்த சாம்பலும்
அதனால் உண்டான பழைய நினைவுகள்...
ஜனனத்தில் தொடங்கியது இது..
மரணத்திலும் தொடரும்...
வலிகளின் பிம்பங்கள்.
-வான்போல் வண்ணம்கொண்டான்.

No comments:

Post a Comment