Wednesday 25 January 2012

இந்தியாவின் விதி

மிளகு திருட கடல் கடந்து
வந்தவனுக்கு வாசல் திறந்து
வாணிகம் என நம்பி அடிமையானோம்...
வளங்கள் அனைத்தையும்
சுரண்டி தந்து கப்பம் கட்டி
கைகட்டி நின்றோம்..

தட்டிக்கேட்டவனுக்கு தூக்கும்
எதிர்த்து நின்றவனுக்கு தோட்டாக்களும்
பரிசாய் வாங்கினோம்...

விடுதலை வேண்டி காத்துக் கிடந்து...
கிடைத்தது ஒரு நாள்...
சட்டம் இயற்றி குடியரசானோம்...
காலமும் கடந்தது...

வேதங்கள் எழுதிய நாட்டில் இன்று
தீவிரவாதம் பயங்கரவாதம்
என்று வாதங்கள் செய்துகொண்டிருக்கிறோம்...

கடல் கடந்து கொடி நாட்டினோம்...
இன்றோ
கடல் கடந்து அகதிகளாய் குடியேறுகிறோம்...

ஆறறிவு கொண்ட ஆட்டு மந்தைகளாய்...
மதத்துக்கு ஒரு விதி..
பணத்துக்கு தரும் நீதி...
ஊருக்கு ஒரு சாதி சங்கம்...
இது ஒற்றுமை மிகுந்த நாடாம்...!

லட்சுமிக்கு சரசுவதி விலைபோவது
இங்கு மட்டுமே...

நாட்டை விற்ற அரசியல்வாதி
பெற்ற சுதந்திரம் பேணிக் காப்போம்
என்று சொல்ல...
இன்னும் கைத்தட்டல் வழுத்தது கூட்டத்தில்...

-வான்போல் வண்ணம்கொண்டான்.

Wednesday 18 January 2012

ரயில் பயணங்களில்

ஒரு தங்கைக்கு தோள் தந்து
ஒரு அண்ணன் அங்கு தாயாகிறான்...

நண்பனின் தோள் மட்டுமல்ல
மடியும் இருக்கிறது உறங்க
என உறங்குகிறான் நண்பன் ஒருவன்...

அங்கங்கு அமர்ந்திருந்த காதலர்களில்
காதலனின் மார்பினில் காதலிகள்
தஞ்சம் புகுந்தனர்...
அங்கு அந்த காதலன் தாயாகிறான்.

கட்டப்பட்ட தூளியில்
குழந்தை அழுதிருக்க...
அவளுக்கோ தாலாட்டத் தெரியவில்லை
இருப்பினும் உறங்குது குழந்தை...

அனுமதிக்கப்பட்ட சிலருக்கு
தனிமையும் அதற்கு துணையாய்
கேசம் கோதிய காற்றும்
அதனுடன் தாயாக
அனைவரும் உறங்கினோம்
தண்டவாளத்தின்
தடக் தடக் தாலாட்டில்.

Wednesday 11 January 2012

1% மனிதம்

மதிய வேளை தொடங்குது.வெயிலுக்கு ஜோடியாய் அவன் நிழலும் சேர்ந்துகொள்ள நடக்கிறான் வேகமாய்.அடிக்கின்ற அனலுக்கு மட்டுமே தெரியும் அவன் கோபமும் அதுபோலவே உள்ளதென.

என்னதான் செய்வது,அவனுக்கு காதல்.வேலை தேடும் படலத்தில் நடக்க ஆரம்பித்த காலத்தில், அந்த கால்கள் அயர்ந்திருந்த பொழுது தட்டுப்பட்ட ஒரே ஒரு ஆறுதல் இவன் காதல்.அதுவும் அந்தக் காலத்திலேயே பூத்ததுதான்.

முதல் சந்திப்பு அவளுக்கும் அவனுக்கும் அந்த நேர்காணலில் தான்.இவனுக்கும் அவளுக்கும் அடுத்தடுத்த பெயர்கள்.கார்த்திக் கார்த்திகா.அழைப்பு மணி அலறியது அவன் மனக்கேள்விகளுடன்.கார்த்திக் உள் நுழைய காத்திருந்தது கேள்விக்கணைகள்.பழக்கப்பட்ட கேள்விகளும் அவன் பதில்களும் சற்று நிதானமாய் இருந்தது.ஆனால் தடுமாறும் மனதை விட அவன் நாவுக்கு தடுமாற்றம் அளித்தது.

பிறந்த குழந்தை திக்கிக்கொண்டு தமிழ் பேசினால் மழலை அழகு என்னும் மக்கள் , குழந்தை வளர்ந்தபின்பு அப்படிப் பேசினால் திக்குவாய் என்பது கவலைக்குரிய விசயமானது இந்த மனிதம் நிறைந்த உலகில்.

நேர்காணல் முடிந்தது.அடுத்ததாய் கார்த்திகா.இவள் உள் நுழைய அவன் கதவைத் திறக்க ஏமாற்றப் புன்னகையுடன் வாழ்த்தினான் "ஆல் த பெஸ்ட்ட்ட்".புன்னகையுடன் சென்றவள், நன்றிப்புன்னகையுடன் திரும்பினாள்.புரிந்துகொண்டான் கார்த்திக்.புரிய முற்பட்டாள் கார்த்திகா.

நவீன யுகம் தந்த துணையுடன் நட்பானார்கள் இருவரும்.குறுஞ்செய்தியும் மிஸ்டு காலும் பாலம் கட்டியது காதலுக்கு. இவன் திக்கித் திணறி சொல்லிய ஐ லவ் யூ தான் அவளின் புன்னகை மந்திரம்.தினம் இரவு நடைபெறும் அந்தரங்கப் பேச்சுகள் முடிவுக்கு வருவதும் அந்த "ஐ லவ் யூ "வில்தான்.

அவன் கண்ணில் இது அனைத்தும் ஓடிய பொழுது மணி 2 ஆனது.பேருந்துக்கட்டணம் உயர்வும் அவன் பர்சை பதம் பார்த்தது. கால்கள் களைத்துப்போனது.உதவியது ஒரு இதயம்.
அவன் வியர்வை முழுதும் காற்றில் காய்ந்துபோகுது.நன்றி சொல்லிக்கொண்டே இறங்குகிறான்.ஒரு பக்கம் புன்னகையும், மறுபக்கம் கோபங்களும் கேள்விகளுமாய்.

கார்த்திகாவின் அப்பா அமர்ந்திருக்க,கலங்கிய கண்களுடன் அலை பேசியை பார்த்தாள் .அது மேஜையின் மீது இருந்தது.பக்கத்தில் ஜாதகமும் சில மாப்பிள்ளைகளின் புகைப்படங்களும்.

நுழைகிறான் கார்த்திக்.வந்தவுடன் கோபப்பார்வைகள் மோதிக்கொள்ள, பதிலேதும் எதிர்பாராமல் கேள்வி கேட்கிறான் "உங்க பொண்ணு கார்ல உட்காந்து இன்னொருத்தன் கூட அழுதுட்டு போகணுமா,இல்ல எ எ எ எ என் கை புடிச்சு சிரிச்சு சந்தோசமா நடக்க்க்க்கணுமா".திக்கித்திணறியது வார்த்தையும் அவன் கோபமும்.

ஒரு நிமிடம் யோசித்த கார்த்திகாவின் அப்பா, எழுந்து வந்து அவன் தோள் தொட்டு,
"உன் குறையாய் காட்டி இவளை நான் உனக்குத்தர முடியாதுனு சொல்லிட்டா , என் மனைவி என்னை ஒதுக்க்க்க்க்க்க்க் க்க்க் க்க் கிவிடுவா" என சொல்லியதும் முகங்கள் மலர்ந்தன.

மலரட்டும் காதல்கள்.

வேற்றுமை

வெள்ளிச்சங்கில் வெண்ணிறத்தில்
பால் நிறைந்து
பட்டுச்சேலையில் அம்மா நிற்கிறாள்...
வேண்டாம் வேண்டாம் என அடம்பிடிக்க
அள்ளிவைத்து ஊட்டுகிறாள்..
ஒரு பங்கு உள்செல்ல...
ஒன்பது பங்கு உதட்டுவழி வழியுது..

ஒட்டிய வயிறும்...
காய்ந்து கருத்த உதடும்...
வறண்டு போன அந்த சிறிய நாக்கும்...
கிழிந்துபோன கந்தையும்
சாராயத்தில் மூழ்கிப்போன தந்தையும்..
பாத்திரம் தேய்க்கப்போன அன்னையும்..
நாயாய் பிறந்திருந்தாலும் எதாவது
கிடைத்திருக்குமோ என அவள் ஒருபுறம் எண்ண..

இதை இரண்டையும்
வேடிக்கை பார்த்தபடி
காத்துக்கொண்டிருந்தாள்
பட்ஜெட் போட்டு அவளின் அன்னை
வாங்கிவரும் பாக்கெட் பாலுக்கு....