Wednesday 29 February 2012

Tuesday 28 February 2012

உனது நிர்வாணமும்
எனது நிர்வாணமும்
உலகத்துக்கு காமம்
உனக்கும் எனக்கும் காதல்.
-வான்போல் வண்ணம்கொண்டான்.

உன்னைச்சுற்றி பெய்யுது மழை
என்னைச்சுற்றி ஏனோ
உஷ்ண காற்று...

Sunday 26 February 2012

அன்பு

நம்மைச்சுற்றி
நாம் எழுப்பிக்கொள்ளும்
உயிர் வேலி.


-வான்போல் வண்ணம்கொண்டான்.

Friday 24 February 2012

எங்கே என் இடம்

தொட்டுவிட்டு உணர்ந்த காதலை
விட்டுச்செல்ல நீ நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...

அணைத்து நின்ற தருணத்தை
அணைத்துவிட எத்தனித்தால்
எங்கேயோ போகுது மனது...

விரல் தீண்டிய நேரத்தை
விட்டுக்கொடு என்று நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...

இதயத்துடிப்பை நீ உணர்ந்த
நிமிடம் மட்டும் போதுமென்று நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...

முத்தமிட்ட ஈரம் இன்னும் இருக்கையில்
முடிந்துவிட்டது அனைத்தும் என்று நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...

தனிமையே துணை என்று
நீ கூறும்பொழுது
அதை நான் நினைத்தால்
எங்கேயோ போகுது மனது...

எங்கே என்று சென்று பார்த்தால்
என் பெயரில் சவக்குழி ஒன்று
எனக்காக காத்திருக்கிறது.

-வான்போல் வண்ணம்கொண்டான்.

Thursday 2 February 2012

நம்பிக்கை

என்றும் உங்களுக்காக காத்திருக்குது
என் முதுகுப்புறம்...
அதை தட்டிக்கொடுப்பதும்...
குத்திக்கிழிப்பதும்...
அவரவர் விருப்பம்.

Wednesday 1 February 2012

வலிகளின் பிம்பங்கள்.

வலிகளின் பிம்பங்கள்.

பனிக்குட பிளவு
தொப்புள்கொடி அறுப்புடன் ஆரம்பம்...

காதில் குத்தப்பட்டு அழுது
சில காலம் கழித்து மறந்து..
மறைந்துபோனதாய் நினைத்து
தொட்டபோது அங்கிருந்த ஒரு புள்ளி...

பிரம்பால் வாங்கிய அடிக்கு
புட்டத்திலும் உள்ளங்கையிலும்
இருந்த சிவப்பு வரிகள்..

திருடித்தின்ற மிட்டாய்க்கு
தண்டனையாய்
அன்று அம்மா வைத்த சூடு...

அவன் உடல் நலன் கருதி
அன்று அவள் எடுத்த
அக்னிச்சட்டியின் கொப்புளங்கள்..

விட்டுச்சென்ற காதல்
விரலில் இருக்கும் சிகரெட்
கைகளில் ஆங்காங்கு இருந்த சில
தளும்புகள்...

கணவன் இறந்தபின்
உடைக்கப்பட்ட வளையல்கள்
கீறியதால் வழிந்த மணிக்கட்டு ரத்தம்..
அழித்துவிட்ட குங்குமம்
அதன்பின் அறுக்கப்பட்ட தாலி...

கோபத்தில் வெளியான வார்த்தைகள்
அதனால் வழிந்த கண்ணீரின்
சுவடுகள்...

முதுமையில் வரும் மறதி
அதனால் பெற்ற அவமதிப்பு
அதற்குப்பின் விடியாத இரவு...

எரிக்கப்பட்டபின் கிடைத்த சாம்பலும்
அதனால் உண்டான பழைய நினைவுகள்...
ஜனனத்தில் தொடங்கியது இது..
மரணத்திலும் தொடரும்...
வலிகளின் பிம்பங்கள்.
-வான்போல் வண்ணம்கொண்டான்.