Monday 26 March 2012

செல்லங்கள்

அம்மா எங்க காட்டு
தத்தி தத்தி வந்து
முத்தமிட்டுக்கொண்டே இதான்
மம்ம்மா...
அப்பா எங்க சொல்லு?
ஓடிவந்து முதுகு மீது ஏறி
கட்டிக்கொண்டு சொன்னான்
இதுதான் அப்ப்ப்ப்பா...
தாத்தா எங்கடா செல்லம்?
தந்தைக்கு பின்னாடி மறைந்துகொண்டே
அதோ குச்சி வச்சுதுக்காது பாதுங்க...
அதான் தாத்தா...
பாட்டி எங்கடா காணாம்ம்?
இதுதான் என்னோட பாட்டி
என்று சொல்லிக்கொண்டே
அமர்ந்தான் பாட்டி மடிமீது...
ஆமா எங்க செல்லம் புஜ்ஜிக்குட்டி
எங்க என்ற கேள்வியில்
செய்வதறியாது திகைத்து
வேகமாய் நிலைக்கண்ணாடி முன்
சென்று இதோ பாதுங்க...
என்று சொல்லிக்கொண்டே
சிரித்தான் வெகுளியாய்...
-வான்போல் வண்ணகொண்டான்.

Thursday 8 March 2012

அவர்களுக்கு ஒரு வாழ்த்து




அன்பு நிறைந்த சுற்றம் அவர்கள்...
ஆறுதல் தரும் ஆலமர நிழல் அவர்கள்...
இசை இச்சை இளகிய மனம் மட்டுமல்லாது
இம்சைக்கும் பெயர் அவர்கள் ...
ஈகையின் விளை நிலம் அவர்கள்...
உலகத்தின் உருவாக்கம் அவர்கள்...
ஊசலாடும் மனதிற்கு தெளிவு தரும் மென்கயிறு அவர்கள்...
என்றும் மாறாத தாய்மை கொண்டவர்கள் அவர்கள்...
ஏது பிழை செய்தாலும் இருப்பினும்
மன்னித்தருளும் மனம்கொண்டவர்கள் அவர்கள்...
ஐம்புலனும் ஆளும் ஆளுமை கொண்டவர்கள் அவர்கள்...
ஒப்பில்லாத காதல் கற்பனைகளுக்கு காரணிகள் அவர்கள்...
ஓடம் செல்லும் போதும் தெளிவான நீரோடை அவர்கள்...
ஒளதாரியமாய் கூறப்படுபவர்கள் அவர்கள்...
அஃதாகினும் இஃதாகினும் வாழ்க்கை அவர்களுடனே...

Wednesday 7 March 2012

அடக்கி வைத்த ஆசைகள்
அழுதுகொண்டு ஆடுகிறது
தொட்டிலில்...

என் ஐவிரல் இடுக்கினில்
உன் நான்கு விரல் சேர்ந்து
பிரியாமல் புணர்வதே காதல்.
-வான்போல் வண்ணம்கொண்டான்.


நான் எடுத்து வைத்த குங்குமம்
என் சட்டையிலும் என் உதட்டிலும்
இருப்பது காதலன்றி எதுவுமில்லை.