Sunday 8 July 2012

ஒரு கடிதம்


அன்புள்ள அம்மாவிற்கும் அறிவு தந்த அப்பாவிற்கும்,

    உங்கள் அன்பு மகனின் முத்தங்களும் வணக்கங்களும். எப்படி இருக்கீங்கனு கேட்க மாட்டேன் நான். ஏன்னா நீங்க நல்லா இருப்பீங்கன்னு ஒரு நம்பிக்கையிலதான் இங்க என்னோட நாட்கள் கழியுது. அங்க அடிக்கடி கரன்ட் கட் ஆகுதுனு சொன்னாங்க. இப்போ இருக்கா?

 இங்க பனிமூட்டம் அதிகமாகவே தான் இருக்கும்.ஆனா கொஞ்ச நாளா அப்படி இல்லை.இங்கயும் வெயில் வாட்டி எடுக்குது. பனிமூட்டம் இருந்தாலும் அதிகமாவே கரையுது. அடுத்த போகிக்கு இன்னும் நாலஞ்சு டயர் வாங்கி எரிச்சுவிட்டாங்கனா இன்னும் இங்க நல்லாவே உருகும்.

செல்போன், -மெயில் அது இதுனு வந்ததுக்கு அப்புறமும் நீங்கதான் இந்திய தபால்துறைக்கு கொஞ்சம் உதவி பண்ணலாம்னு சொல்லி கடுதாசி எழுதி அனுப்ப சொல்றீங்க.அதுனாலதான் மெனக்கெட்டு எழுதவேண்டியதா இருக்கு. நான் கூட பரவாயில்ல, என் கூட இருக்க ஒரு சில தமிழ் பசங்களுக்கு தமிழ் பேச மட்டும்தான் வருமாம்,என்னைய மாதிரி தப்புத்தப்பா எழுதக்கூட தெரியாதாம்.கேட்டா பள்ளிக்கூடத்துல ஒண்ணாப்பு படிக்கும்போதே ஹிந்தி படிக்க சேர்த்துட்டாங்களாம். இந்தி தெரியாம ஒரு 3 மாசம் எனக்கு தொல்லையா இருந்துச்சு. ஆனா பழகுனதுல இப்போ கொஞ்சம் திக்கி திணறி பேசுறேன்.

விவசாயம் எப்படி இருக்கு இப்போ ? தண்ணி வத்திடுச்சுன்னு போர்வெல் போட்டுக்கலாம்னு சொன்னதுக்கு , இல்ல சொட்டு நீர் பாசனம் போதும் நம்ம வயக்காடுக்குனு சொன்னீங்க. புதுசு புதுசா விவசாயம் இருக்காம்ப்பா.அதயும் கொஞ்சம் முயற்சி செஞ்சு பாருங்க.அதுக்காக எதோ தகவல் தர்றதுக்கு நம்பர் இருக்கு.1551. இதுக்கு அடிச்சு கேட்டீங்கனா எதாச்சும் தகவல் கிடைக்கும். இந்தியிலதான் பேசுவாங்கனு நெனக்குறேன்.

அதுவுமில்லாம இப்போ விவசாய நிலம் எல்லாம் ரியல் எஸ்டேட் காரனுங்க போட்டி போட்டு வாங்கி விக்குறாங்களாம். அத மட்டும் செஞ்சுடாதிங்கப்பா. அம்மா அடிக்கடி சொல்லும் ,
"ஊட்டிவிட்டது நானா இருந்தாலும், உழுதுபோட்டது உங்கப்பனா இருந்தாலும் , உன் உசுரு இருக்க காரணம் நம்ம பூமிதான்யா"னு. என்ன கஷ்டம் வந்தாலும் அத மட்டும் விட்டுக்கொடுக்காதீங்க.

எனக்கு இங்க லீவ் கேட்டுருக்கேன்.கிடைக்குமானு தெரியல.வெள்ளைக்காரன் கிட்ட இருந்து வாங்குன சுதந்திரத்த இன்னும் காஷ்மீருக்கு மட்டும் கிடைக்கமுடியாம நாங்க இங்க அல்லாடுறோம். எப்போ பாகிஸ்தான்காரன் வருவான், எப்போ சீனாக்காரன் வருவான்னு காவக்காத்துட்டு இருக்கோம்.என்னோட ஆசையும் இதுல கிடைக்குற நிம்மதியும் அந்த கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்காந்து தட்டுறதுல கிடைக்காதுனு தான் இதுக்கு வந்தேன். பட்டாளத்தான் அப்பன் ஆத்தானு உங்களுக்கும் ஊருக்குள்ள பெருமைதான. அனுப்பிவிட்ட பணத்த பாதி செலவுக்கும் , விவசாயத்துக்கும் வச்சுட்டு மீதிய இன்சூரன்ஸ்ல கட்டிக்குங்க.ஏமாத்துற பைனான்ஸ் கிட்ட தேடி போய் குடுக்காதீங்க சொல்லிப்புட்டேன்.

வேற என்ன இருக்கு சொல்ல, ஆஹ். தேர்தல் வருதுன்னு சொன்னாங்க. யோசிச்சு ஓட்டுப்போடுங்க. காசு எதாச்சும் குடுத்தாங்கன்னா அதக்கொண்டுபோய் எதாச்சும் உதவி செய்ற ஆஸ்ரமம், காப்பகத்துல குடுத்துடுங்க.அவங்களாச்சும் நல்லா சாப்பிடுவாங்க.

உங்க ஒடம்ப பாத்துக்குவீங்க.நானும் இங்க நல்லா இருக்கேன். உங்ககிட்ட பேசனும்னு ஆசதான்.நீங்கதான் ஊர்ல குருவிய கொன்ன அந்த போன் வேணாம்னு சொல்லிட்டீங்க.சரி விடுங்க.நேர்லயே பாத்து பேசிக்கலாம்.

என்றும் உங்கள் அன்புள்ள மகன்,
மேஜர்.தமிழ்மகன். (எ) ராசுக்குட்டி.

என கடிதத்தை எழுதிவிட்டு "இந்த லெட்டர அப்படியே போஸ்ட் பண்ணிடுங்க" என கார்க்கியிடம் தந்தான் பிரபா. "மேஜர்.தமிழ்மகன்னு யாருமே இங்க இல்லையே மேஜர்"
"யாருமில்லாத எனக்கு அப்பா அம்மாவா இருந்தது அவங்கதான்,தமிழ் வேலை கிடைக்காத விரக்தியால தீவிரவாதியா மாறிட்டான்.போன வருஷம் ப்ளாஸ்ட் நடந்தப்போ அவன்னு தெரிஞ்சுதான் சுட்டேன்".

















No comments:

Post a Comment