Sunday 6 November 2011

பாடங்கள்

தலைவனும் தலைவியும் கூட
உதவி புரிவாளாம் தோழி...
அதற்குப் பெயர் களவு
என ஆரம்பித்தாள் தமிழ் ஆசிரியை...

பக்கத்து அறையில்
ஒரு ஹைட்ரஜனுடன் காதல்
இன்னொரு ஹைட்ரஜனுடன் கள்ளக்காதல்
ஒரு அவள் ஆக்சிஜன் செய்வதே
தண்ணீரின் காரணி
என ஆணியடித்துப் புரிய வைத்தான்
ஒரு நவீன இளைஞன்...

ஒரு மூளை அறையில்
என்னவென்றே புரியாத குழந்தைகளுக்கு
ஆங்கிலத்தில் ஆற்றிக்கொண்டிருந்தாள்
ஒரு தமிழ்ப்பெண்...

"x" என்பது எப்பொழுதும்
ஒரு தெரியாத கருமமென
கவலைப்படுத்திக்கொண்டிருந்தாள்
கணிதக்காரி ஒரு அறையில்...

ஒன்றிற்கும் உதவாத வரலாற்றில்
நடந்த போரினைக் கண்முன்
வைத்துக்கொண்டிருந்தான் ஒரு
ஆசிரியப்பெருமான்..

ப்ளாஸ்டிக்கினால் உலகம் மாசுபடும்
என்று சொல்லிக்கொண்டே
தன்னுடைய பையில் சுற்றி வைத்திருந்த
ப்ளாஸ்டிக் பையினை வெளியில் எறிந்தாள்
ஒரு சுற்றுப்புற அபிமானி...

இத்தனையும் அங்கங்கு நின்று கொண்டு
பார்த்துவிட்டு தொழில்பார்க்கச் சென்றான்
பள்ளிக்கு அருகே செருப்பு தைத்து
வாழ்க்கை நடத்தும் சிறுவன்...

No comments:

Post a Comment