Monday 8 August 2011

திரும்பிப்பார்க்கிறேன்

அம்மா மசித்து தந்த இட்லி சாப்பிட்டு
செம்மண்ணிலும் ஆற்று மணலிலும்
கொட்டாங்குச்சியில் இட்லி செய்து..
அதை சாப்பிடுவதுபோல் சமிக்ஞை செய்து கொட்டியது...
பறந்து சென்ற தட்டானைப் பிடித்து
வாலில் நூல் கட்டி
பறக்கின்ற தட்டானை
பட்டமாய் விட்டு விளையாடியது...
கோலிகுண்டு விளையாட வேண்டுமென்று
கரண்டியில் குழி தோண்டி
அம்மாவுக்கு தெரியாமல் கழுவிவைத்தது...
பலூன் வேண்டுமென்று அடம்பிடித்து வாங்கி
அடுத்த நிமிடமே வெடித்ததும்...
அழுது புரண்டு அளப்பறை செய்தது...
விளையாடும் போது பொம்மையை
அடித்து சத்தம் போடாதே என மிரட்டியது...
வாயிலேயே என்ஜின் சத்தமும்
ஹாரன் அடித்துக்கொண்டும் கார் ஓட்டியது...
அழுதுகொண்டிருந்த குழந்தையை ஆசுவாசப்படுத்தி
ஏன் எனக்கேட்டு...கிள்ளியதற்காகதான் அழுதியா
என மறுமுறை கிள்ளியது...
கருப்பு வெள்ளை படத்தில் வந்த
எம்ஜிஆர் என்ன கலரில் சட்டை போட்டார்
என்று எகத்தாள கேள்வி கேட்டது...
மின்சாரம் இல்லை...எப்படி இந்த
கடிகாரம் மட்டும் ஓடும் என்று
அறிவாய் சந்தேகக் கேள்வி கேட்டது...
அருள் வந்து சாமியாடிய
பக்கத்து வீட்டு அக்காவைப் பார்த்து
அம்மாவின் பின் சென்று ஒளிந்து...
அடுத்த நாள் அக்காவுக்கு
முன் நின்று சாமி கும்பிட்டு சூடம் ஏற்றியது...
குட்டி மீன் என நினைத்து
தவளைப் பிரட்டையை தண்ணித் தொட்டியில்
வளர்த்து திட்டு வாங்கியது...
காலையில் காணாமல் போகும் நிலவை
இரவில் விரலுடன் ஒப்பிட்டுப் பார்த்தது...
இல்லாத காய்ச்சலை வரவைக்க
இறைவனுக்கு வேண்டி லஞ்சம் தந்தது...
பொதி சுமந்த மாட்டுவண்டியின்
பின் சென்று கூடுதல் சுமையாய் தொங்கி விளையாடியது...
நேற்று தந்த பரிட்சைத் தாளில்
இன்று பெய்த மழையில்
கப்பல் செய்து கவிழ்த்து விளையாடியது...
கிட்டிப்புள் விளையாடி
கிழவனின் முகத்தைப் பதம் பார்த்தது...
திருவிழா கூட்டத்தில் தொலைந்தபின்
அம்மா தொலைந்துவிட்டாள் என்று
காவலரிடம் புகார் கொடுத்தது....
குச்சி ஐஸும் குல்பி ஐஸும் சாப்பிட்டு
குச்சிகளை சேமித்து வைத்தது...
புளியம்பழம் தின்ன ஆசைப்பட்டு
வேப்பமர அடியில் தேடித் திரிந்தது...
அரசமர இலையில் பீப்பியும்...
தேங்காய் தொட்டியில் மேளமும்...
மழைக்காலத்தில் முளைத்த காளான்கள்
என்ன மண்ணிற்கு குடையா என யோசித்தது...
தீவிரவாதிகள் தகர்க்க முடியாத ரயிலாய்
நாங்கள் வலம்வந்ததும்...
காக்கா கடி கடித்து மிட்டாய் தின்னதும்...
சாதி மத பேதமின்றி எல்லாரும்
ஒன்றாய் ஒரு வீட்டு உணவினை
பகிர்ந்துண்ணது...
என்றும் திரும்பக் கிடைக்காத
என் கடந்த காலத்தை...
திரும்பிப் பார்க்கிறேன்...இன்னும் குழந்தையாய்...




1 comment:

srinivasan said...

உஙகள் கவிதைகள‍் அருமை

Post a Comment