Friday 19 August 2011

உனக்கும் எனக்கும்

தீ சுட்டபின் என் விரலுக்கு
உன் உதடு தந்த காற்றே
தென்றல் எனக்கு...
உச்சி வந்த சூரியனுக்கு
நீ தரும் பதிலாய்
நீ உதிர்த்த வேர்வையே
மழை எனக்கு...
இரு விழிக்கவிதை மேல்
கருப்புக் கவிதைகளாய் உன் புருவங்களே
வானவில் எனக்கு..
விழாக்கால வேளையில்
கைகளில் கலகலக்கும் வளையோசையே
இசை எனக்கு...
எனக்காக நீ எழுதிய
ஒவ்வொரு கடிதமும்
கவிதை எனக்கு...
அன்றொரு நாள்
கடற்கரையில் உன் பெயர் எழுதியதே
இன்பம் எனக்கு...
உன் காலடி பட்ட
வாசல் மண்ணும்
பொக்கிஷங்கள் எனக்கு...
நெற்றியில் நீ வைத்த பொட்டு
கறுப்பென்றாலும் அதுவே
நிலவு எனக்கு...
நீ இட்ட கோலத்தில்
பிடித்து வைத்த சாணமும்
சிலை எனக்கு...
நீ வெட்டிப் போட்ட
நகங்கள் அனைத்தும்
சிற்பங்கள் எனக்கு...
தூக்கத்தில் நீ உளரும்
ஒவ்வொரு சிணுங்கலும்
தாய்மொழி எனக்கு...
நம் கண்கள் இரண்டும்
மோதிக்கொள்வதே
மூன்றாம் உலகப் போர் எனக்கு...
நீ தந்த முத்தத்தில்
இதழ் வெடித்து ரத்தம் சிந்தியதே
விழுப்புண் எனக்கு...
நாம் போட்ட சண்டையில்
உன் நகம் தந்த கீரல்கள்
ஒவ்வொன்றும் கல்வெட்டு எனக்கு...
வானொலிப் பாட்டுக்கு
நீ செய்யும் லாலாலா எல்லாம்
பாடல் எனக்கு...
நான் அனுப்பும் ம்ம்ம்
என்ற குறுஞ்செய்திக்கு
உன் குறுநகையே
காவியம் எனக்கு...
மண்மீது தேவதையாய்
என் கைபிடித்த கயவளாய்
காதலி நீ எனக்கு...
நீ விட்டுச்சென்றாலும்
என்னுள் வாழும் காதல்
என்றும் உனக்கு...


No comments:

Post a Comment